ஆண்டாள் வரலாறு

தமிழில் உள்ள பல்வேறு பல்வேறு பக்தி இலக்கிய நூல்களில் முதன்மை நூல்கள் சிலவே. அவற்றுள் திருப்பாவையும் ஒன்றாகும். திருப்பாவையை இயற்றியவர் ஆண்டாள்.  ஆண்டாளது இயற்பெயர் கோதை. இவரே பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார். ஆண்டாள் துளசிச் செடியின் அருகில் இருந்து பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட குழந்தை ஆவார்.
பெரியாழ்வார் வைணவ  நெறியை பின்பற்றுபவர். ஆண்டாள் திருமாலின் மீது பக்தி கலந்த காதலை கொண்டிருந்தார். ஆண்டாள் பூமித்தாயின் (பூமாதேவி) மனித உருவம் என்றும் கூறப்படுகிறது. பெரியாழ்வார் திருமாலுக்கு மாலை தொடுக்கும் போது தன்னுடைய வாயில் துணி ஒன்றை கட்டிக் கொண்டு அந்த மாலைக்கு ஒரு மாசும் ஏற்படாதவாறு தொடுப்பார். அவ்வாறு அவர் தொடுத்து வைத்த மாலையை தினமும் ஆண்டாள் பெரியாழ்வார் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை ஒப்பனை செய்து கொண்டு  அணிந்து தான் திருமாலுக்கு உகந்தவரா? என்று எண்ணி தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பார். அவ்வாறு அவர் சூடியிருந்த மாலையை கழற்றி அஃது எங்கிருந்ததோ அங்கேயே வைத்து விட அதை திருமாலுக்கு அணியச் செய்ய பெரியாழ்வார் அதைக் கோயிலுக்குக்
கொண்டு செல்வார். ஒரு நாள் கோயிலின் அர்ச்சகர் அந்த மாலையில் தலைமயிற் இருப்பதை கண்டு திருமாலுக்கு இஃது உகந்த மாலை அல்ல என்று பெரியாழ்வாரிடம் முறையிட்டார். அந்தத் தலைமயிற் தன்னுடைய மகள் உடையது என்பதை பெரிய ஆழ்வார் அறிந்து கொண்டார். மேலும் வீடு திரும்பியதும் கோதையை அவர் கடிந்து கொண்டார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் வந்து இன்று ஏன் தனக்கு மாலை அணிவிக்கச் செய்யவில்லை? என்று வினவினார் அதற்கு பெரியாழ்வார் கோதை அந்த மாலையை அணிந்து அதை மாசு படுத்தி விட்டாள் என்றார். அதற்கு திருமால் கோதை அணிந்த மாலையே தனக்கு விருப்பம் என்று பெரியாழ்வாரிடம் கூறினார். இந்த நிகழ்வினாலேயே ஆண்டாளுக்கு சூடிக் கொடுத்த சுடர் ஒளி என்ற சிறப்பு பெயர் வழங்கப் பெற்றது. ஆண்டாளுக்கு நாச்சியார் என்ற வேறு பெயரும் உண்டு. ஆண்டாள் திருமண வயதை எட்டியதும் பெரியாழ்வார் ஆண்டாளிடம் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? என்று அவரது விருப்பத்தை கேட்க ஆண்டாளோ திருமாலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவரிடம் கூறினார். பெரியாழ்வார் இஃது எவ்வாறு சாத்தியமாகும்? என்று குழம்பி இருந்தார். அன்றிரவே திருமால் அவரது கனவில் தோன்றி கோதையை மணப்பெண் போல் ஒப்பனை செய்து திருவரங்க கோயிலுக்கு அழைத்து வா என்றும் அங்குதான் கோதையை  மணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார். அதேபோல் பெரியாழ்வார் கோதையை திருவரங்கம் அழைத்துச் செல்ல அங்கே கருவறைக்குச் சென்ற கோதை திருமாலின் பாதம் தொட்டவுடன் திருமாலுடன் கலந்துவிட்டார்.

கருத்துகள்