சிவன் அடியார்களில் முதல் அடியார்

முன்னொரு காலத்தில் ஜலந்தாரசூரன்  தேவர்களுக்கும் மக்களுக்கும் தொந்தரவு செய்து வர...  அதை தாங்க முடியாத தேவர்கள் காக்கும் கடவுளான  திருமாலிடம் தங்களை காக்கும்படி வேண்டுகின்றனர்...
திருமாலோ ,"என்னிடம் அவனை அழிக்கும் சக்தி இல்லை நான் சிவபெருமானிடம் சென்று சக்தி பெற்று அசுரனை வெல்கிறேன் " என்று கைலாயம் நோக்கி செல்கிறார்... 
அங்கு  ஈசனோ கடும்தவக்கோலத்தில் தன்னிலை மறந்து இருக்கிறார்...  
 திருமால் எந்நேரமும் நித்திரையில் இருப்பவர்...  சிவனோ எந்நேரமும் ஆழ்நிலை தியானத்தில் இருப்பவர் (எனவே தான் இவர்கள் இருவரிடத்திலும் வரம்  வாங்குவதற்கு நாம் கடும் விரதங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது)...
சிவபெருமானின் தவத்தை கலைக்க விரும்பாத திருமாலோ  தினமும் அவரை 1000 தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்து வருகிறார்... 
அப்படி ஒரு நாள் பூஜை செய்யும்பொழுது 1000 மலர்களில் ஒன்று குறைந்து போகவே ( 1000 மலர்களில் ஒன்றை அரக்கன் திருடி செல்வதாகவும் கதை உண்டு சிவபெருமானது திருவிளையாடலால் மலர் மறைந்ததாகவும் சொல்லபடுகிறது ).. 
திருமலோ செங்கமலர் கண்ணன்,  தாமரை கண்ணன், பங்கய கண்ணன் அல்லவா... 
தனது கண்களில் ஒன்றான இடது கண்ணை எடுத்து சிவபெருமானை அர்ச்சனை செய்ய மனம் மகிழ்ந்து உள்ளம் குளிர்ந்த சிவ பெருமான்  விஷ்ணு முன்தோன்றி.... 
சுதர்சன சக்கரம் தந்து அருளினார்.... 

எட்டாம் திருமுறை திருவாசகம் பாடல்...

பதிகம் 15 தோள்நோக்கம்.. பாடல் 10

பங்கயம் ஆயிரம்
    பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன்
    சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான்
    சக்கரம்மாற் கருளியவாறு
எங்கும் பரவிநாம்
    தோணோக்கம் ஆடாமோ 
                                    - மாணிக்கவாசகர்

பொருள்: பங்கயம் (தாமரை மலர்) ஆயிரத்தில் ஒன்று குறைய  தன்னுடைய கண்ணை இடந்தரன் (சிவன் ) திருவடிமேல்  சார்தலுமே  சிவபெருமான்  சுதர்சன சக்கரம் தந்தருளினார் இந்த பெருமையை சொல்லி உங்கள் தோள்களை குலுக்கி ஆடுங்கள்... 

சிவன் அடியார்களில் முதல் அடியார்
சக்கராயுதபாணியாக விளங்கும் திருமாலே ஆவார்... 

ஹரியும் அரனும் ஒன்று என்பதற்கு இன்றளவும் கோமதி  அம்மன் கோவிலில் இருக்கும் சங்கரநாராயணர் திருவுருவமே சான்று 

இவ்வாறு நான் எழுதுவதற்கு பல்வேறு சான்றுகளை தந்து உதவிய முத்துக்குமரன் அண்ணாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


வாசகர்கள் ஏதேனும் ஐயங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின் கருத்துரையில் பதிவிடுக.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்